தமிழ்நாட்டில் குற்றங்களைத் தடுக்கும் விதமாக ரவுடிகளிடம் நள்ளிரவில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ரவுடிகளை ஒடுக்க அவர்களின் வீடுகளிலும் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள சுமார் 50 ரவுடிகளின் வீடுகளில் நேற்று முன்தினம் (23.09.2021) இரவு அதிரடியாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நடந்த இந்த சோதனையில், ரவுடிகளின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல், அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 37 ரவுடிகளைக் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளைப் போலீசார் பிடித்து எச்சரித்துவருகின்றனர் என்ற தகவல் வெளியாகியது. நேற்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ஒரே இரவில் 560 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியான நிலையில், இன்று கைது செய்யப்பட்டவர்களை சேர்த்து தமிழ்நாட்டில் இதுவரை கடந்த இரண்டு நாட்களில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 733 பேர் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுதும் கைதான ரவுடிகளிடமிருந்து 934 கத்தி, அரிவாள்கள், 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 700 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டதோடு கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொலைக்குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் தொடரும் என தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார்.