வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் கரோனா பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அதிலும் விதிமுறைகளை மீறும் கடைகள், வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஜீன் 13-ந் தேதி மட்டும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத கடைகள், நிறுவனங்கள் என வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 21 கடைகளுக்கு சீல் வைத்துள்ளது காவல்துறையும், வருவாய்த்துறையும்.
அதேபோல் கரோனாவுக்காக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறியதாக 63 வழக்குகளை பதிவு செய்துள்ளது காவல்துறை.
கரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு விதிக்கப்பட்ட மார்ச் 23-ந் தேதி முதல் ஜீன் 13-ந் தேதி வரை 8669 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 95 சதவித வழக்குகள் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கரவாகனங்களில் விதிகளை மீறி ஊர் சுற்றியவர்கள் மீது போடப்பட்டு அவர்கள் பயணித்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளாகும்.
இந்த வழக்குகளில் சம்மந்தப்பட்டதாக 9063 பேர் கைது செய்யப்பட்டு, அப்போதே அவர்களது சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதற்கான அபராதம் கட்டப்பட்ட பின்னர் விடுவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.