Skip to main content

வாரம் 200 ரூபாய் கூலிக்கு 12 குழந்தைகள் உட்பட 22 பேர் கொத்தடிமை!!

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மணிமங்களம் கிராமத்தில் தளாளன் என்பவர் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த கோழிப்பண்ணையில் 6 இளைஞர்கள் மனைவி, பிள்ளைகளோடு தங்கி வேலைபார்க்கிறார்கள் என்கிற தகவல் சென்னையில் இயங்கும் இண்டர்நேஷ்னல் ஜஸ்டீஸ் என்கிற அமைப்பின் வழியாக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்துக்கு தரப்பட்டது.

labor

 

 


அந்த தகவலின் அடிப்படையில் செய்யார் சப்-கலெக்டர் அன்னம்மாள், அந்த கோழிப்பண்ணைக்கு சென்று பார்த்தபோது கோழிப்பண்ணையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்கா கன்னிக்கோயில் கிராமத்தை சேர்ந்த 22 வயதான ரங்கநாதன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர், 24 வயதான முருகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர், திருவள்ளுவர் மாவட்டம், ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 21 வயதான சங்கர் அவரது சகோதரர் 20 வயதான வல்லரசு, பருவதம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 18 வயதான ராஜேஷ், அவரது மனைவி சித்ரா, திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அடுத்த நெடுங்கல் கிராமத்தை சேர்ந்த முருகன், அவரது 14 வயது மகள் பவித்ரா என 22 பேர் இருந்தனர். அதில் 12 குழந்தைகள் என்பது குறிப்பிடதக்கது. அதில் ஒருப்பெண் பிறந்து ஓரிரு மாதங்களே ஆன கைக்குழந்தையோடு இருந்தது மனதை உருக்குவது போல் இருந்தது.

labor


அவர்கள் தங்கியிருந்த வீடு பன்றி தொழுவம் போல் இருந்தது. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இவர்களை கோழிப்பண்ணை வேலைக்கு என அழைத்து வந்து விவசாய வேலையையும் வாங்கியுள்ளார்கள். சரியான உணவு இல்லாததால் குழந்தைகள் நோஞ்சான் போல் இருந்தனர். இவர்களுக்கு வாரம் 200 ரூபாய் கூலி வழங்கியது தெரியவந்துள்ளது. தினசரி தினமும் 30 ரூபாய் சொச்சத்துக்கு 24 மணி நேரமும் வேலை வாங்கியுள்ளார்கள் கல்நெஞ்சர்கள்.

 

labor

 

 


10 ஆயிரம் முன்பணம் வாங்கியுள்ளோம், 4 வருடமாக இங்கு வேலை செய்கிறோம், எப்போதாவுது யாராவது ஒருவர் ஊருக்கு போய் வருவோம் எனச்சொல்ல அதிகாரிகள் அதிர்ச்சியாகினர். அவர்களை வந்தவாசி தாலுக்கா அலுவலகத்துக்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். சம்மந்தப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர் தயாளன், மேலாளர் சஞ்சீவி மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர் போலிஸார். இவர்களை காப்பாற்ற பேரமும் நடக்கிறது.


கொத்தடிமைகளாக இருந்தவர்களுக்கு அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் நிதி தந்து அவர்களது ஊருக்கு அனுப்பிவைத்தனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.

சார்ந்த செய்திகள்