Skip to main content

5 ரூபாய்க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்... மாவட்டத்திலேயே முதல் முறையாக செயல்பாட்டுக்கு வந்த திட்டம்!!

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

குடிதண்ணீர் குடம் ரூ. 10 க்கு வாங்கிக் கொண்டிருந்த கிராம மக்களுக்கு 20 லிட்டர் ரூ. 5 க்கு வழங்கும் திட்டம் பல இடையூறுகளுக்கு மத்தியில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள் ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகாவில் உள்ள கடைக்கோடி கிராமம் ஏம்பல். முழுக்க முழுக்க வானம் பார்த்த பூமி. மழைத் தண்ணீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மக்கள். மழை பொய்த்தால் விவசாயமும் பொய்த்துப் போகும். ஆனால் குழந்தைகளை படிக்கை வைத்த கிராம மக்கள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், என பல துறைகளிலும் பணியாற்றும் இளைஞர்களை உருவாக்கிவிட்டனர் கிராம மக்கள். இப்படி வளர்ந்த இளைஞர்கள் முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் இணைந்து தங்கள் கிராமத்தை உயர்த்த வேண்டும் என்று திட்டமிட்டனர். 

 

 20 liters of purified drinking water for Rs 5...


அதற்காக பொருளாதார உதவிகளுடன் களப்பணியிலும் ஈடுபடத் தொடங்கினார்கள். அரசுப் பள்ளியில் தொடங்கி, அரசு மருத்துவமனை, நீர்நிலைகள் சீரமைப்பு, சாலைப் பணிகள் என்று அடுத்தடுத்து பல பணிகளை சிறப்பாக செய்தனர். பல வருடங்களாக மூடிக் கிடந்த வாரச் சந்தையை திறந்து சாதித்தனர். ஒவ்வொரு பணிக்கும் அரசுக்கு விண்ணப்பித்து அவற்றை பெற்றும் கிராம வளர்ச்சிக்காக கொண்டு வந்தனர்.

இப்படி ஒரு திட்டம் தான் கிராமங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்.. கடந்த நிதி ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 1500 க்கும்  கிராமங்களில் தலா ரூ. 8 லட்சம் மதிப்பில் மணிக்கு ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கும் ஆர்.ஒ. பிளாண்ட்கள் அமைக்க அறிவிப்பு வெளியானது. அதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 68 பணிகள். அதில் ஒன்று தான் ஏம்பல் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டது.

முன்னாள் மாணவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து தொய்வின்றி பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் ஒரு சில அதிகாரிகள் அதற்கும் முட்டுக்கட்டை போட அவற்றை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்துப் பணிகளையும் சிறப்பாக செய்து முடித்தனர்.

 

 20 liters of purified drinking water for Rs 5...

 

இந்த நிலையில் நேற்று சோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது ரூ. 5 போட்டால் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வரும். இந்த திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது..., முன்னாள் மாணவர்களால் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல அரசு திட்டங்களும் கொண்டுவரப்படுகிறது. அதில் ஒரு திட்டம் இந்த குடிதண்ணீர் சுத்திகரிப்பு திட்டம். குடிதண்ணீர் தொட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த பிளான்டில் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வெளிவருகிறது.

இப்ப வரைக்கு ஒரு குடம் ரூ.10 க்கு விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பருகினோம். இனி ரூ. 5 க்கு 20 லிட்டர் தண்ணீர் பிடிக்கலாம். காசை போட்டால் 20 லிட்டர் தண்ணீர் வரும். புதுக்கோட்டை மாவட்டத்திலேயே முதல் முறையாக செயல்படத் தொடங்கிவிட்டது இந்த திட்டம் என்றனர்.

இதே போல தமிழ்நாடு முழுவதும் திட்டம் செயல்படத் தொடங்கினால் மக்கள் குடிதண்ணீருக்காக செய்யும் செலவை கொஞ்சம் குறைக்கலாம். 

 

 

சார்ந்த செய்திகள்