வேலூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் குறித்து அடிக்கடி மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் செப்டம்பர் 8 ந்தேதி, ஒண்டே ஆப்ரேஷன் என்கிற பெயரில் மாவட்டத்தில் 100 இடங்களில் 35 பேர் கொண்ட மருத்துவத்துறையின் சிறப்புப்படை சோதனை நடத்தினர் .
மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஷ்மின் உத்தரவின் பேரில் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில் திருப்பதூர் - 6, வாணியம்பாடி -3, திம்மான்பேட்டை-3, பேர்ணாம்பட்டு அடுத்த பரந்தராமி-2, சோளிங்கர்-1, ஓட்சேரி-1, காவேரிப்பாக்கம்-1, சுமைதாங்கி-1, இராணிப்பேட்டை பகுதியில்-1 என்கிற எண்ணிக்கையில் போலி மருத்துவர்கள் சிக்கியுள்ளனர் .
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் செல்வகுமார், திடீர் சோதனையில் ஈடுப்பட்டபோது திருப்பத்தூர் அடுத்த தோரணம்பதி ஹவுசிங்போர்டு, புத்தாகரம், கந்திலி ஆகிய கிராமப்புற பகுதிகளில் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த சத்தியநாரயணன், குலசேகரன், வெங்கடேசன், மாது மற்றும் ஆனந்தன் ஆகிய 5 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையம் மற்றும் கந்திலி காவல்நிலையத்தில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார் புகாரின் அடிப்படையில் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சோதனை தகவலை கேள்விப்பட்டு மேலும் பல போலி மருத்துவர்கள் தங்களது கிளினிக்கை மூடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.