சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எல்காட் நிறுவனம் சார்பில் மேலும் இரண்டு நிரந்தர ஆதார் பதிவு மையங்களை ஆட்சியர் கார்மேகம், வெள்ளிக்கிழமை (27.08.2021) திறந்துவைத்தார்.
இந்த மையத்தில் புதிய ஆதார் பதிவுகள், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பிறந்த தேதி திருத்தம், பாலினம் திருத்தம், புகைப்படம் மாற்றம், கண் கருவிழி மற்றும் கைரேகைப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்துப் பதிவுகளையும் மேற்கொள்ளலாம்.
எல்காட் நிறுவனம் சார்பில் ஏற்கனவே ஆட்சியர் அலுவலக கட்டடத்தில், ஒரு நிரந்தர ஆதார் பதிவு மையமும் குழந்தைகளுக்கென தனி மையமும் இயங்கிவருகின்றன. மேலும், மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் ஒரு மையம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் செயல்பட்டுவருகின்றன.
அதேபோல், இடைப்பாடி, மேட்டூர், ஆத்தூர், நரசிங்கபுரம் ஆகிய நகராட்சி அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் இம்மையங்களில் ஆதார் சேவைகளைப் பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆதார் மையத் திறப்பு விழாவில் எல்காட் நிறுவன கிளை மேலாளர் லோகநாதன், அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் பிரகாஷ், சேலம் வருவாய் வட்டாட்சியர் செம்மலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.