விக்கிரவாண்டி அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற போது மூழ்கிய சிறுவனை மீட்கச் சென்றவரும் உயிரிழந்துள்ள சம்ப்வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள மதுரபாக்கத்தில் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த சின்னத்தம்பியின் மகன் குமார். இவர் கூலித் தொழிலாளி. இவரது உறவினர் மகன் அஜித் (9) உள்ள இவர் 4ஆம் வகுப்புப் படித்து வருகிறார்.
நேற்று மாலை இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள சாரங்கபாணி ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர். அதில் இறங்கிக் குளிக்கும்போது அஜித், தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதைக் கவனித்த குமார், அஜித்தைக் காப்பாற்றுவதற்க்காக தண்ணீரில் இறங்கியுள்ளார். இருவரும் தண்ணீருக்கு அடியில் இருந்த சேற்றில் கால் சிக்கி கரையேற முடியாமல் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
குளிக்கச் சென்ற இருவரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர் சங்கராபரணி ஆற்றில் சென்று தேடியுள்ளனர். ஆற்றின் கரையில் அவர்கள் விட்டுச்சென்ற துணிகள் மட்டும் கிடந்துள்ளது. இதைக் கண்டு சந்தேகமடைந்த அவர்கள் அங்கிருந்து தண்ணீரில் இறங்கித் தேடியுள்ளனர். இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துபோன சடலமாக மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து விக்ரவாண்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு உதவி ஆய்வாளர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கிய சிறுவன், அவரைக் காப்பாற்றச் சென்ற குமார் ஆகிய இருவரும் இறந்து போன சம்பவம் மதுரபாக்கம் கிராம மக்களை பெரும்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது இதுபோன்று தண்ணீரில் மூழ்கி சிறுவர்கள் சிறுமியர் இறப்புகள் தொடர் சம்பவங்களாக நடைபெற்று வருகின்றன. முன்பெல்லாம் கிராமப்புறங்களில் வளரும் பிள்ளைகள் பொதுவாக நீச்சல் கற்று இருப்பார்கள். ஆறு குளம் கிணறு இப்படிப்பட்ட நீர்நிலைகளில் சர்வ சாதாரணமாக இறங்கிக் குளிப்பார்கள். கரை ஏறுவார்கள். நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரில் சிக்கிக் கொள்ளும் போது அவர்களைத் துணிந்து சென்று காப்பாற்றிக் கரை சேர்ப்பார்கள். தற்போதுள்ள கிராமத்துப் பிள்ளைகள் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் சிக்கி இறந்து போகும் நிலை அதிகரித்துள்ளது. கிராமப்புற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கற்றுக் கொடுக்க முன்வருகிறார்கள். அதேபோன்று வாழ்வியலை எதிர்கொள்ளும் நீச்சலையும் கற்றுக் கொடுக்க முன் வரவேண்டும் என்கிறார்கள் கிராமப்புறங்களில் வாழும் முதியோர்கள்.