சேலத்தில், அதிக சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் ஆசை வலை விரித்து, மூன்று பெண்களிடம் 2.14 லட்சம் ரூபாய் மோசடி செய்த வரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் மணிமலர். இவருடைய செல்போனுக்கு கடந்த 2020- ஆம் ஆண்டு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் தேநீர் தூள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு பல்வேறு பதவிகளுக்கு ஆள்கள் தேவை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்புக் கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசிய நபர், தனது பெயர் சசிகுமார் கொண்டையன் (வயது 40) என்பதும், தான் சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து பேசுவதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
எஸ்எம்எஸ்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது நிறுவனத்தில் ஆள்களை சேர்த்து விடும் முகவர் என்றும், அங்கு வேலைக்கு சேர்ந்தால் அதிக ஊதியம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். வேலைக்குச் சேரும் நபர்கள், தனக்கு கமிஷன் தொகை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வேலை தேடிக்கொண்டிருந்த மணிமலர், தன் தோழிகள் மேகலா, பரமேஸ்வரி ஆகியோரிடமும் கூறியுள்ளார். அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து 2.14 லட்சம் ரூபாயை சசிகுமார் கொண்டையனிடம் கொடுத்துள்ளனர். ஆனால் நாள்கள் நகர்ந்ததே தவிர அவர் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.
கால தாமதம் ஆனதால் பணம் கொடுத்த பெண்கள் அவரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டனர். விசாரித்ததில் அவர் பலரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூன்று பெண்களும் சசிகுமார் கொண்டையன் மீது சேலம் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோசடி நபரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.