தமிழ்நாட்டில் நாளை (09/01/2022) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவிருப்பதால், சென்னையில் குறைந்த அளவே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தெற்கு ரயில்வே இன்று (08/01/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவிருப்பதால், சென்னையில் இருந்து புறநகர்களுக்கு மொத்தம் 343 ரயில் சேவைகள் இயக்கப்படும். அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்திற்கு 113 சேவைகளும், கும்மிடிப்பூண்டிக்கு 60 ரயில் சேவைகளும், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 30 சேவைகளும், செங்கல்பட்டிற்கு 120 சேவைகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து முன்பதிவு டிக்கெட் கவுன்ட்டர்களும் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். வரும் ஜனவரி மாதம் 10- ஆம் தேதி முதல் இம்மாத இறுதி வரை இந்த நடைமுறையே பின்பற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை கவுன்ட்டரில் சமர்ப்பித்து டிக்கெட் மற்றும் பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், ஏற்கனவே மாதாந்திர பாஸ் வைத்திருப்போர் டிக்கெட் பரிசோதகர் கேட்கும் போது, இரண்டு தவணை தடுப்பூசிக்கான சான்றிதழைக் காட்ட வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனர்.
UTS செயலி வழியாக வரும் ஜனவரி 31- ஆம் தேதி வரை புறநகர் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.