
சேலத்தில், கரட்டில் இருந்து உருண்டு விழுந்த ராட்சத பாறைகளால் இரண்டு வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று சேலம் மாநகர பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக சேலம் நெத்திமேடு கரியபெருமாள் கரடு மீது இருந்த ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன.
கரட்டில் இருந்து உருண்டு வந்த பாறைகள் அடிவாரத்தில் இருந்த வீடுகள் மீது விழுந்தன. இதில், வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் பாறாங்கற்களை அகற்றினர்.
இதுகுறித்து மாரிமுத்து, செந்தில்குமார் ஆகியோர் கூறுகையில், ''நள்ளிரவு ஒரு மணியளவில் பாறைகள் அடுத்தடுத்து உருண்டு விழுந்தன. நாங்கள் அப்போது வீட்டுக்குள் முன்பக்கமாக படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தோம். பாறாங்கற்கள் வீட்டின் பின்பகுதியில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினோம்.
ஏற்கனவே இதுபோல சிலமுறை பாறைகள் விழுந்துள்ளன. அரசாங்கம் எங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் குடியிருப்பு வசதிகளைச் செய்து தந்தால், நாங்கள் ஏன் இப்படிப்பட்ட ஆபத்தான இடத்தில் குடியிருக்கப் போகிறோம்,'' என்றனர்.
கரிய பெருமாள் கரடு அடிவாரத்தில் குடியிருப்போரில் பெரும்பாலானோர் தினக்கூலித் தொழிலாளர்கள். பலர், ஆட்டோ ஓட்டுநர்களாகவும், கட்டடத் தொழிலாளர்களாகவும் உள்ளனர். தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், மிகப்பெரும் அளவில் உயிர்ச்சேதம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு, அப்பகுதிவாழ் மக்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.