நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு
நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து கடத்தப்பட்ட பெண் குழந்தையை போலீசார் 2 மணிநேரத்தில் மீட்டனர்.
திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். ஓட்டல் தொழிலாளி. அவரது மனைவி முத்துமாரி. இருவரும் தங்களது 2 வயது மகள் ஜெயஸ்ரீயுடன் நேற்று இரவு 7 மணியளவில் நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டிற்கு வந்திருந்தனர். தீபாவளிக்கு வந்திருந்த உறவினரை சென்னைக்கு அனுப்பிவிட்டு கிளம்பும் நேரத்தில் மகள் ஜெயஸ்ரீ காணாமல் போனதை அறிந்தனர். இதுகுறித்து பஸ் ஸ்டாண்ட் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நெல்லை போலீஸ் உதவி கமிஷனர் மாரிமுத்து மற்றும் ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் விசாரணை நடத்தினர்.
பஸ் ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு சிசிடிவி கேமிரா காட்சிகளை பார்த்தபோது, ஒரு பெண், சிறுமியை தூக்கிக்கொண்டு செய்துங்கநல்லூர் செல்லும் பஸ்சில் செல்வது தெரிய வந்தது. அதிரடியாக பஸ்சை பின் தொடர்ந்து சென்ற இன்ஸ்பெக்டர் உதயசூரியன் தலைமையிலான போலீசார் செய்துங்கநல்லூரில் குழந்தையை கடத்திய பெண்ணை வளைத்துப் பிடித்தனர். அப்போது குழந்தையைக் கடத்திய பெண் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை அடுத்துள்ள நாட்டார்குளத்தை சேர்ந்த கோமதி என்ற கிளாடிஸ் 45, என்பது தெரிய வந்துள்ளது. குழந்தையையும் கடத்திய பெண்ணையும் போலீசார் நெல்லை சந்திப்பு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.