தர்மபுரி அருகே லஞ்சம் வாங்கியதாக நெடுஞ்சாலைத்துறை அலுவலக கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் ஆகிய இரு ஊழியர்களை லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த சந்திரசேகர் (48) என்பவர் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில், பாலக்கோடு அருகே உள்ள தண்டுகாரன அள்ளியைச் சேர்ந்த தனபால் (40) இளநிலை உதவியாளராகவும், அரூரைச் சேர்ந்த குப்புசாமி (42) என்பவர் சாலைப் பணியாளராகப் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக குப்புசாமிக்கு ஊதிய நிலுவைத்தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தனக்குரிய ஊதிய நிலுவையை வழங்கும்படி கண்காணிப்பாளர் சந்திரசேகரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், 4000 ரூபாய் கொடுத்தால் ஊதிய நிலுவைக்கான கோப்புகளை உடனடியாக முடித்துக் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.
தனக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய ஊதிய நிலுவையை பெறவே லஞ்சம் கேட்கிறார்களே என விரக்தி அடைந்த குப்புசாமி, அப்போதைக்கு சந்திரசேகர் கேட்டபடியே லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டார். ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத குப்புசாமி, இதுகுறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி, ரசாயன பவுடர் தடவப்பட்ட 4000 ரூபாய் தாள்களை எடுத்துச் சென்ற குப்புசாமி, கண்காணிப்பாளர் சந்திரசேகரிடம் கொடுக்கச் சென்றார். ஆனால் அவரோ, அந்தப் பணத்தை இளநிலை உதவியாளர் தனபாலிடம் கொடுக்கும்படி கூறியதால் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே சாதாரண உடையில் அந்த அலுவலகம் அருகே பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் பாய்ந்து சென்று தனபாலை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறியதன் பேரில்தான் அந்தப் பணத்தை வாங்கியதாகக் கூறியுள்ளார். அதன் பேரில் சந்திரசேகரையும் கைது செய்தனர். அந்த அலுவலகத்தில் காவல்துறையினர் 7 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்தனர்.