சேலத்தில் நகை சேமிப்பு திட்டம் நடத்தி 2 கோடி ரூபாய் வரை சுருட்டிக்கொண்டு, ஒரு குடும்பமே திடீரென்று மாயமாகிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் குகை பச்சையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (72). இவருடைய மகன் ஆனந்த்பாபு (38). இருவரும் நகை தொழில் செய்து வருகின்றனர். நகை சேமிப்பு திட்டம், வாராந்திர சீட்டு சேமிப்புத் திட்டங்களையும் நடத்தி வந்தனர். அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் உள்பட 800க்கும் மேற்பட்டோர் இவர்களிடம் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர். முதிர்வு காலம் அடைந்த பிறகும் முதலீட்டுக்கான வட்டி, முதிர்வுத்தொகையை தராமல் ராமமூர்த்தி, ஆனந்த்பாபு ஆகியோர் காலம் கடத்தி வந்துள்ளனர்.
அடுத்தடுத்து பண்டிகைகள் நெருங்கி வருவதால் முதலீட்டாளர்கள் தினமும் அவர்களுடைய வீட்டிற்கே சென்று பணத்தைக் கேட்டுள்ளனர். நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, ராமமூர்த்தி, அவருடைய மனைவி கஸ்தூரி (67), மகன் ஆனந்த் பாபு, இவருடைய மனைவி ஐஸ்வர்யா, இவர்களின் இரண்டு குழந்தைகள் என 6 பேரும் திடீரென்று குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர்.
ராமமூர்த்தியின் மகள் சாந்தா, வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அவர்கள் சென்ற இடம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அதேநேரம், தந்தை உள்ளிட்ட அனைவருடைய அலைபேசி எண்களும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தா, இதுகுறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் செப். 29ம் தேதி இரவு புகார் அளித்தார்.
நகை சேமிப்பு திட்டம், ஏலச்சீட்டு நடத்தி வந்த ஆனந்த்பாபு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளதாக தெரிகிறது. இந்த வீட்டை முதலீட்டாளர்களின் பணத்தில் இருந்துதான் கட்டினார் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் அவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்களா? அல்லது வெளியூர் சென்று விட்டார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.