சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட காவலர்கள் சீலநாயக்கன்பட்டி பகுதிக்கு விரைந்தனர்.
அங்கே சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர், சேலம் மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்த குணசேகரன் (வயது 38) என்பதும், விற்பனைக்காக கஞ்சா கடத்திவந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், சேலம் ஜவஹர் மில் அருகே பள்ளப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் ரோந்து சென்றபோது, சந்தேகத்தின்பேரில் ஒரு பெண்ணைப் பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்த கைப்பையை சோதனை செய்தபோது ஒரு கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர், மெய்யனூரைச் சேர்ந்த மாதம்மாள் (வயது 48) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரையும் கைது செய்தனர்.