கோவை, உக்கடம் அல்அமீன் காலனி பகுதியில் சுமார் ரூ.1.80 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளைப் பதுக்கி வைத்திருந்த இருவரைக் கேரளப் போலீஸார் கைது செய்தனா். கேரள மாநிலம், எா்ணாகுளம் உதயம்பூா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதாக கேரள தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த மார்ச் 28ஆம் தேதி கேரளப் போலீஸார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதில் கோவையைச் சோ்ந்த பிரியன்லால் என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 95 ஆயிரத்து 300 மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகளைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா், கோவையில் உள்ள அஷ்ரப் அலி (21) என்பவரிடம் இருந்து கள்ளநோட்டுகளைப் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து, கோவை, உக்கடம், அல்அமீன் காலனியில் உள்ள அஷ்ரப் அலி வீட்டில் கேரள தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று (22.04.2021) சோதனை மேற்கொண்டனா். அப்போது அவரது வீட்டில் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அஷ்ரப் கொடுத்த தகவலின் அடிப்படையில், கரும்புகடையைச் சோ்ந்த சையது சுல்தான் (32) என்பவரது வீட்டில் கேரளப் போலீஸார் சோதனையிட்டபோது, அங்கு ரூ.1.80 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுக் கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சையது சுல்தான், அஷ்ரப் ஆகிய இருவரையும் கைது செய்த கேரள தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், பணத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், குனியமுத்தூா் காவல் நிலையத்தில் வைத்து அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தினா். விசாரணைக்குப் பிறகு இருவரையும் கேரள மாநிலத்துக்கு அழைத்துச் சென்றனா்.