குறுக்குவழியில் 18 பேரை தகுதி நீக்கம் செய்திருப்பது பேடித்தனமான செயல்: மு.க.ஸ்டாலின் பேட்டி
குறுக்குவழியில் 18 பேரை தகுதி நீக்கம் செய்திருப்பது பேடித்தனமான செயல் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
கட்சி தாவல் தடைச் சட்டத்தின் அடிப்படையில், சபாநாயகர் 18 பேரை தகுதி நீக்கம் செய்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. நியாயமாக, ஒரு கொறடாவின் உத்திரவை, அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மீறினால், கட்சி தாவல் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது தான் முறை. அதுதான் நியதி, சட்டம். ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது, சபாநாயகரும், முதலமைச்சரும் கூட்டு சேர்ந்து, சதி செய்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்திருக்கிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
அதேநேரத்தில் நான் கேட்கும் ஒரு கேள்வி, ஆறு மாதத்துக்கு முன்பாக இதே சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் புகாரின் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்போது 18 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் காரணம் என்னவென்றால், சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை இப்போது அவர்களுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் 18 பேரை நீக்கி விட்டால், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதால், ஆளும் கட்சியான ‘குதிரை பேர’ அரசு குறுக்கு வழியில், பேடித்தனமாக இப்படிப்பட்ட காரியத்தில் அவர்கள் இறங்கி இருக்கிறார்கள்.
இதையெல்லாம் முன்கூட்டியே அறிந்த காரணத்தினால் தான் நீதிமன்றத்திற்கு நாங்கள் சென்றிருக்கிறோம். ஏனென்றால், குட்கா பிரச்னையை வைத்து திமுகவின் 21 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளார்கள். அதனைத் தடுத்து நிறுத்தவே நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறோம். நாளை மறுநாள் நீதிமன்றத்தில் அந்தப் பிரச்னை வரவிருக்கிறது. எனவே, நாங்கள் நீதிமன்றத்திற்கும் சென்றிருக்கிறோம், தொடர்ந்து மக்கள் மன்றத்திற்கும் செல்வோம்.
எது எப்படியிருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ‘குதிரை பேர’ ஆட்சியைப் பற்றி மக்கள் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். நாளை நடைபெறும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தமிழகத்தில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலைகள், ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நிலை பற்றியெல்லாம் ஆலோசித்து, விவாதித்து முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.