திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவும், பௌர்ணமி கிரிவலமும் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவை. மகா தீபம் அன்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் என சுமார் 25 லட்சம் பேர் திரண்டுவந்து தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தோராயமாக 40 முதல் 50 லட்சம் மக்கள் கலந்துகொள்வார்கள். கரோனா பரவலைத் தடுக்க ஒன்றிய – மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் பிரம்மாண்டமான தீபத்திருவிழா கோலாகலமில்லாமல் ஆகமவிதிகளின்படி கோவிலுக்குள்ளேயே நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கிரிவலம் தடை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் இரண்டாம் முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை (19.11.2021) காலை பரணி தீபமும் மாலை மலையில் மகா தீபமும் ஏற்றப்பட இருக்கும் நிலையில், திருவண்ணாமலை கிரிவலத்திற்கு இன்றும் நாளையும் 15,000 வெளியூர் மக்களை அனுமதிக்கலாம் என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெறும் வழக்கு ஒன்றில் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் உள்ளூர் மக்கள் 5 ஆயிரம் பேரை அனுமதிக்கலாம். கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பில்லை. பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கட்டளைதாரர்கள் 300 பேரை அனுமதிக்கலாம் எனவும் தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது. அரசின் பதிலை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.