புதுச்சேரி காலப்பட்டில் உள்ள மத்திய சிறையில் சிறை கண்காணிப்பாளராக உள்ளவர் கோபிநாத். இவர் சில நாட்களுக்கு முன்பு சிறைக்குள் ரோந்து சென்ற போது கைதிகளிடம் இருந்த 2 செல்ஃபோன்கள் மற்றும் பேட்டரி, சார்ஜர் ஆகியவற்றை பறிமுதல் செய்து காலப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து காலப்பட்டு போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி போலீசார் சிறைக்குள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கைதிகள் அறைகளில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 செல்ஃபோன்கள், பேட்டரி சார்ஜர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 6 தண்டனை கைதிகள் மற்றும் 8 விசாரணை கைதிகள் மீது காலப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் கைதிகளுக்கு செல்ஃபோன் சப்ளை செய்ய சிறைத்துறை வார்டன் ஆனந்தராஜ் உதவியதாக இருந்தது தெரிய வந்தது. அதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை ஐ.ஜி பங்கஞ்குமார் உத்தரவிட்டுள்ளார்.