திருச்சி நீதிமன்றத்தினுடைய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 133வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வரும் 22 மூத்த வழக்கறிஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, திருச்சி முதன்மை நீதிபதி பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ”திருச்சி நீதிமன்றத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் நிச்சயம் செய்து தரப்படும். எனக்கு வழக்கறிஞர்கள் பணி குறித்து எதுவும் தெரியாது. ஆனால், கடந்த ஆட்சியிலே நான் வழக்கறிஞர்கள் குறித்தும், அவர்களின் பணி குறித்தும் முழுமையாக தெரிந்து கொண்டேன்” என பேசினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேசுகையில், “இந்த பழமையான வழக்கறிஞர்கள் சங்கத்தின் விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியை தருகிறது. மூத்த வழக்கறிஞர்களை கௌரவப் படுத்தியது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. என்னுடைய தந்தையும் ஒரு மூத்த வழக்கறிஞர் தான், அவருக்கு கீழ் 50க்கும் மேற்பட்ட இளம் வழக்கறிஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களும் இன்று என்னுடைய தந்தையை நினைத்து பார்க்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவின் மூலம் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு தேவையான வசதிகளை நிச்சயம் செய்து கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்னுடைய தரப்பிலும் நான் அரசுக்கு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சௌந்தர்ராஜன், சங்கத்தின் உறுப்பினர்களான ராஜேந்திர குமார், லட்சுமணன், வீரபாண்டியன், ஜெயபிரகாஷ், நாராயணன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.