சென்னை கோயம்பேட்டில் மது போதையில் 13 வயது சிறுவன் பேருந்துகளை மறித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாகவே சிறார்கள் மது போதைக்கு அடிமையாவதும், போதை பொருட்டுகளை எளிதில் கையாள்வது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும். இந்நிலையில், சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் 13 வயது சிறுவன், மற்றொரு சிறுவன் என இரண்டு பேர் மது போதையில் பேருந்து மற்றும் வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது.
நேற்று இரவு 11 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைக் கண்டித்து சிறுவர்களை எச்சரித்த போலீஸாரிடமும் பொதுமக்களிடமும் 2 சிறுவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்களை தாக்கவும் முயன்றனர். உடனே அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சிறுவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றார். இருப்பினும் சிறுவர்கள் இருவரும் கேட்கவில்லை. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பொதுமக்களே சிறுவர்களைப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில் சிறுவர்கள் மெரினா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் கோயம்பேடு பகுதிக்கு வந்த சிறுவர்கள் செல்போனை கடையில் சார்ஜ் செய்ய கொடுத்ததாகவும் அப்பொழுது செல்போன் காணாமல் போனதாகக் கூறி ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.