கோப்புப்படம்
புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக 31-ஆம் தேதி சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தடைகளை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவல்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவில், 'ரிசார்ட்டுகள், பண்ணை வீடு, அரங்குகள், கிளப்புகளில் வர்த்தகரீதியான புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது, ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளில், கேளிக்கை நிகழ்ச்சி, டி-ஜே இசை நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகிய இடங்களில் ஒன்று கூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. மெரினா கடற்கரையில் போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. காமராஜர் சாலை, பெசன்ட்நகர் கடற்கரை ஒட்டிய சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 31ஆம் தேதி இரவு பைக் ரேஸ், அதிக வேகமாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஹோட்டல்ள், தங்கும் விடுதி வசதி உள்ள உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை மட்டுமே அனுமதி. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உணவு விடுதிகள் செயல்பட அனுமதி வழங்கப்படும். இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியே ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும். மெரினா, எலியட்ஸ், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் பொதுமக்கள் கூட வேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தற்போதுவரை புத்தாண்டை ஒட்டி சென்னையில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் மீது தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.