தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக திருப்புதல் தேர்வு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற கணித தேர்வு வினாத்தாள் நேற்றே இணையதளங்களில் கசிந்தது. இந்த வினாத்தாள் திருவண்ணாமலை பகுதியில் இருந்து கசிந்தது. அதேபோல, 10ஆம் வகுப்பு அறிவியல் வினாத்தாளும் முன்கூட்டியே கசிந்தது. இது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று மதியம் தொடங்கிய வணிகவியல் தேர்வுக்கான வினாத்தாளும் முன்னதாகவே இணையத்தில் கசிந்தது தெரியவந்துள்ளது. பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டுவிடுவதால், இவ்வாறு இணையத்தில் கசிவதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த நிலையில், வினாத்தாள்கள் நாளை முதல் முன்கூட்டியே பள்ளிகளுக்கு வழங்கப்படாது என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.