தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதால், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் பால் பவுடர் விநியோகம் குறித்து பால்வளத்துறை அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னையில் வழக்கமாக வினியோகம் செய்யும் பால் வினியோகம் செய்யப்பட்டு, கூடுதலாக நேற்று 12.5 டன் பால் பவுடரும் இன்று 11 டன் பால் பவுடரும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வினியோகம் செய்ய போதுமான அளவு பால் பவுடர் கையிருப்பு உள்ளது. மேலும் பால் பவுடர் தேவைப்படுபவர்கள் ஆவின் விற்பனை நிலையங்களைத் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.