கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது.
என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் பொட்டாசியம் நைட்ரேட், சிவப்பு பாஸ்பரஸ் உள்ளிட்ட 109 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான என்.ஐ.ஏவின் முதல் தகவல் அறிக்கையில் கார் வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகே உள்ள கோவில் பூசாரி அளித்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் வெடிப்புக்கு பிறகு பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. அதில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளசரின், சிவப்பு பாஸ்பரஸ், அலுமினியம் பவுடர், சல்பர் பவுடர், ஆணிகள் உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபீன் வீட்டிலிருந்து துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி என்.ஐ.ஏ இந்த வழக்கை கையில் எடுத்துள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், முகமது ரியாஸ், முகமது தல்கா, முகமது நவாப் இஸ்மாயில், முகமது அசாருதீன், ஃபிரோஸ் இஸ்மாயில் ஆகிய ஐந்து பேரும் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ஐவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.