தமிழகத்தில் மின்னல் பாய்ச்சலிலிருக்கிறது கரோனா 2ம் அலை. முககவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றுவதே நோய்த் தடுப்பின் அடிப்படை.. அதோடு தடுப்பூசி போட்டுக் கொள்வது தனிமனித பாதுகாப்பு என வலியுறுத்தப்படுகிறது. எனவே தடுப்பூசி போடுவதின் அவசியம் பற்றி பல்வேறு தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புற அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான வாழ்வாதாரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் ஆண்கள் பெண்களுக்கானது 100 வேலைவாய்ப்பத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள் கரோனா தடுப்பூசி போட்டால்தான் வேலை. இல்லையெனில் கிடையாது என்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் நீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சொன்னதாகத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து நடுவக்குறிச்சியின் மேஜர் பஞ்சாயத்தான புதுக்கிராமத்தில் மக்களிடையே சலசலப்பு. மேலும் சங்கரன்கோவில் அருகேயுள்ள இருமன்குளத்தில் ஏராளமான பெண்கள் 100 நாள் திட்ட வேலை கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வட்டார லெவலில் உள்ள அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி அனுபாமா உள்ளிட்டோர், தற்போது தமிழகத்தில் கரோனா 2ம் அலை வேகமெடுக்கிறது தொற்றுப் பரவலைத் தடுக்கவும் மக்களைக் காப்பாற்றவும், பாதுகாப்பு நடவடிக்கையாக அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. 100 நாள் வேலைக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே நல்லெண்ணத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பிலிருந்தும் தற்காத்துக் கொள்ளலாம் தவிர அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே தொற்றுப் பரவலைக் குறைக்க முடியும் என்கிறார்கள்.