புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில்வதற்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவையிலுள்ள முதல்வர் அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், வளர்ச்சி ஆணையர், புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர், உயர் கல்வித்துறை இயக்குனர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
அதேபோல் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர், முதலமைச்சரின் செயலாளர், சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டங்களுக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் இருந்து, பேருந்து சேவை பிற மாநிலங்களுக்கு இயக்கத் தயாராக இருந்தாலும் தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம்.
மீண்டும் கரோனா தொற்று இரண்டாவது அலையாகப் பரவும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அதனால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அமைச்சரவை கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க முடிவு செய்துள்ளோம். நீட்தேர்வைப் பொருத்தமட்டில் 2018 - 19 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளியில் படித்த 94 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் படித்த 1,346 மாணவர்கள் தேர்வு பெற்று இருக்கின்றனர். அதேநேரம், அரசுப் பள்ளியில் படித்த 16 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த 16 பேர்களில் புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர், மாகேவைச் சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எனவே புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்காக 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளோம். அதை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம். 10 சதவீத இட ஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பில் வழங்குவதற்கான ஒப்புதலை துணைநிலை ஆளுநரிடமிருந்து பெறுவோம். அனுமதி மறுத்தால் அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும்.
மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கோரி தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இட ஒதுக்கீடு என்பது தமிழகத்தில் 69%மாகவும் புதுச்சேரியில் 50%மாகவும் உள்ளது. புதுச்சேரியில் மாநில அரசினுடைய மொத்த இட ஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் வழங்கப்படுகிறது.
அதேபோல் மத்திய தொகுப்பில் இருந்து புதுச்சேரிக்கு 27 சதவீத ஒதுக்கீடு கிடைக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக மோடி தலைமையிலான மத்திய அரசும், இந்திய மருத்துவக் கழகமும் செயல்பட்டு வருகின்றன. இது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையைப் பறிப்பதாகும், அம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதை ஏற்க முடியாது. அனைத்துச் சமுதாயத்திற்கும் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவதுதான் சமூகநீதி. எனவே உடனடியாக பிரதமர் இதில் தலையிட்டு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, புதுச்சேரிக்கு 27 சதவீதமும், தமிழகத்துக்கு 50 சதவீதமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன்.
அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துச் சொன்னால் தேசவிரோதிகள் என பா.ஜ.க ஆட்சி விமர்சனம் செய்கிறது. குறுகிய காலத்தில் வேண்டுமென்றால் இந்த மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் அவர்கள் தொல்லை கொடுக்கலாம். சர்வாதிகாரப் போக்கு பல ஆண்டுகளுக்கு நீடிக்காது. நாட்டு மக்கள் இவை எல்லாவற்றுக்கும் முடிவு கட்டுவாடுவார்கள்" இவ்வாறு பேசினார்.