Skip to main content

எட்டு வழிச்சாலைக்கு எதிராக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை!; விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு

Published on 16/08/2018 | Edited on 27/08/2018

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, பத்து லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை நடத்தப்படும் என விவசாயிகள் சங்க கூட்டமைப்பு இன்று (ஆகஸ்ட் 16, 2018) அறிவித்துள்ளது. அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்களின் மாநில ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று நடந்தது. மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.

 

salem

 

 


சேலத்தில் இருந்து சென்னை செல்ல ஏற்கனவே மூன்று சாலை வழித்தடங்கள் உள்ளன. இந்நிலையில் அதிவிரைவு எட்டு வழிச்சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதற்காக நிலம் அளவீடு, முட்டுக்கல் நடுவது ஆகிய பணிகளை முடித்துவிட்டன. நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் எழுத்துப்பூர்வமாக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன.


ஆனால் தமிழக அரசு, காவல்துறையினர் மூலம் விவசாயிகளை மிரட்டியும், பொய் வழக்குப் போட்டும், ஆசை வார்த்தை கூறியும் நிலத்தை அளந்துள்ளது. எட்டு வழிச்சாலைக்கு எதிராக பேசினால், கூட்டம் நடத்தினால், போராடினால்கூட கைது செய்கின்றனர். ஜனநாயக உரிமைகளை பறிக்கும் தமிழக அரசின் இத்தகைய போக்குகளை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் எட்டு வழிச்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும் வாழ்வாதாரங்களை இழக்கும் நிலை ஏற்படும். மலைகளை குடைந்தும், வனங்களை அழித்தும், நீர்நிலைகளை தூர்த்தும் சாலை அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். அதிவிரைவுச் சாலை என்பதால் கிராமப்புற மக்கள் இந்தச் சாலையை பயன்படுத்த முடியாது.

 

salem

 

 


தாது வளங்களை கொள்ளையடிக்கும் திட்டமும் இதில் அடங்கியுள்ளது. எனவே, எட்டு வழிச்சாலைத் திட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். விவசாயிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை நடப்பட்ட முட்டுக்கற்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் பத்து லட்சம் பேரிடம் கையெழுத்துப் பெற்று, முதல்வரிடம் நேரில் வழங்கப்படும். வரும் செப்டம்பர் 15க்குள் கையெழுத்து இயக்கம் முடிக்கப்பட்டு, மூன்றாவது வாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விசாரணை நடத்தவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது. 


இப்பிரச்னையில் தொடர்ந்து கவனம் செலுத்தும் வகையில், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கவும் முடிவு செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமி-ழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் துரைமாணிக்கம், ரவீந்திரன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மாநிலத்தலைவர் லாசர், விவசாயிகள் மகாசபை சந்திரமோகன், நதிகள் இணைப்பு கிருஷ்ணா மற்றும் ராமமூர்த்தி, பொன்னுசாமி, குழந்தைவேல், தங்கவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

சார்ந்த செய்திகள்