இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில் பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், வாழ்வாதாரம் இழந்த தமிழர்கள், தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 29/04/2022 ஆம் தேதி பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட தமிழக அரசு தயாராக உள்ளது. இலங்கையில் மண்ணெண்ணெய் வாங்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ரூபாய் 15 கோடியில் 500 டன் பால் பவுடர்களை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கவும் தமிழக அரசு தயாராக இருக்கிறது. ரூபாய் 80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசியை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது. ரூபாய் 28 கோடியில் 137 வகையான மருந்துப் பொருட்களை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது'' என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இலங்கைக்கு திமுக சார்பில் 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் திமுக எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.இதனால் திமுக சார்பில் 2 கோடி ரூபாய்க்கும் மேல் நிதியுதவி செய்யப்பட இருக்கிறது.