சென்னை கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (54). இவர், ரியல் எஸ்டேட் தரகரான துரை சே.பாலா என்பவரிடம் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹேமா சேஷன் என்பவருக்கு சொந்தமான காலி மனை இடத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளார். அதன் பின்னர், ராமசாமி தனது இடம் என நினைத்து அந்த காலி இடத்தில் ஒரு பெயர் பலகையை வைத்துள்ளார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள், இது குறித்து ஹேமா சேஷனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த ஹேமா சேஷன் அந்த இடத்திற்கு வந்து பார்த்த போது அங்கு பெயர் பலகை இருந்துள்ளது. உடனடியாக, இது குறித்து அவர் பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆட்சேபனை கடிதம் கொடுத்தார்.
அவர் எழுதிய அக்கடிதத்தில், ‘தனக்கு சொந்தமான இடத்தில் வேறு ஒருவர் பெயர் பலகையை வைத்துள்ளார். எனவே, இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ராமசாமிக்கு தெரியவந்தவுடன், தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. உடனடியாக, இது குறித்து ரியல் எஸ்டேட் தரகரான துரை சே.பாலாவிடம், தான் ஏமாந்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை திருப்பி தருவதாக கூறிய துரை சே.பாலா மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரும் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.
இதனால், ஏமாற்றமடைந்த ராமசாமி இது குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், ராமசாமியிடம், ரியல் எஸ்டேட் தரகரான துரை சே.பாலா மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரும் கூட்டு சேர்ந்து குன்றத்தூர் ஹேமா சேஷன் என்பவருக்கு சொந்தமான காலி மனை விற்பனைக்கு வருவதாக ஆசை வார்த்தை கூறி அந்த இடத்தை காண்பித்துள்ளனர். அதன் பின்பு, ஹேமா சேஷன் என்ற பெயரில் போலியாக ஆள்மாறாட்டம் செய்து ஒருவரை ராமசாமியிடம் காண்பித்துள்ளனர். இதையடுத்து, அந்த இடத்திற்கு ரூ.1 கோடி 40 லட்சம் விலை பேசி முன்பணமாக ரூ.30 லட்சம் நேரிலும், ரூ.75 லட்சம் வங்கி மூலமாக ராமசாமியிடம் இருந்து வாங்கியுள்ளனர்.
மேலும், ராமசாமி பெயருக்கு பவர் எழுதிக் கொடுத்ததைப் போல் போலி ஆவணங்கள் தயாரித்து வைத்துக் கொண்டு ராமசாமியிடம் இருந்து மீதி பணத்தை பெற்றுள்ளனர். அதன் பின்னர், ராமசாமியிடம் இருந்து ரூ.1 கோடி 5 லட்சம் 50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு துரை சே.பாலா மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேரும் தலைமறைவாகியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாகியிருந்த துரை சே.பாலா என்பவரை நேற்று (12-12-23) போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான அவரது கூட்டாளிகளான 5 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.