Skip to main content

சமூக வலைதளங்களில் கோபம் காட்டும் இளைஞர்கள் தேர்தலில் காட்ட வேண்டும் - கமல்ஹாசன்

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி தொகுதி வேட்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியனுக்கு ஆதரவு திரட்டும்  பொதுக்கூட்டம் ஏ.எப்.டி திடலில் நடைபெற்றது. கூட்டத்தில்  மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் புதுச்சேரி மாநிலத்தின் நீண்ட கால கோரிக்கையான மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் உள்ளிட்ட தீர்மானங்கள் அடங்கிய புதுச்சேரி மக்களவை தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசுகையில்,    

 

kamal

 

"புதுச்சேரி என்றாலே எனக்கு பாரதி பெயர்தான் நினைவுக்கு வரும்.  பாரதியை பாதுகாத்து அவரது ஆயுளை நீட்டித்த ஊர் இது. புதுச்சேரியும், தமிழகம்தான்.  ஆனாலும், தனித்தன்மை வாய்ந்த தமிழகத்தின் ஒரு பகுதி. இந்த தனித்தன்மையை ஒருபோதும் புதுச்சேரி இழக்கக்கூடாது. புதுச்சேரி தனியாக தொடர்வது புதுச்சேரிக்கும்,  தமிழருக்கும் பெருமை. புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து தேவை.  அரசியல் கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் தேர்தலில் நல்ல கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.  

படுத்த படுக்கையாக இருக்கும் தமிழகம், புதுச்சேரியை எழுந்து நிற்க வைக்க வேண்டிய பொறுப்பு மக்களிடம் உள்ளது. டிவிட்டரில் கோபம் காட்டும் இளைஞர்கள்,  தேர்தலில் வாக்களித்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்.  நல்ல யோசனை கொடுப்பதே எங்களது விரோதிகள் தான். ட்விட்டரில் மட்டுமே இயங்கி வந்ததாக என்னை விமர்சனம் செய்ததால் 3 மாதங்களில் அரசியல் களத்துக்கு நேரடியாக வந்துவிட்டேன்.

50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து சிலர் கேள்வி கேட்கின்றனர்.  வேலைகளை பல பிரிவுகளாக பிரித்து ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பு என இலக்கு வைத்து 5 ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலை என முடிவு செய்துள்ளோம்.


வளங்களை முறையாக கையாள தெரிந்த பன்னாட்டு நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டுவர நவடடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு பிணையில்லா கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இல்லத்தரசிகளை வீட்டில் இருந்தே சுயதொழில் செய்ய ஊக்கப்படுத்துவோம். விவசாயத்தை லாபகரமாக மாற்றும் வகையில் தனித்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 

தமிழகத்தில் மொத்தமுள்ள 60,000 கிராமங்களில் 30,000 இடங்களில் குளங்களை வெட்டினாலே கூடுதல் வேலைவாய்ப்பை அளிக்க முடியும். தமிழத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நல்ல விஷயங்களை செய்வதாக சொல்வது வழக்கம். ஆனால் இரு கட்சிகளும் செய்யவில்லை. இரு கட்சிகளும் தங்களுக்கு என சொத்துக்களை மட்டுமே சேர்த்துக்கொண்டனர்.  ரூ.20,000 கோடி, ரூ.30,000 கோடி என திருடினால் மக்களுக்காக எப்படி நிதி இருக்கும்.


மக்கள் கொடுக்கும் அதிகாரத்துக்காக மக்கள் நீதி மய்யம் காத்திருக்கிறது.  பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல் அல்ல இது. ஒவ்வொரு பகுதி மக்களின் குரலை மக்களவையில் எதிரொலிக்க வைக்க செய்யும் தேர்தல்தான் இது.  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக தாமதம் ஆனாலும், பொதுவாழ்வுக்கு வந்துவிட்டேன். இனி எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான்.  எனது சொந்த வாழ்க்கைக்கு தேவைப்படும் பணத்துக்காக மட்டுமே இப்போதும் திரைப்படத்தில் நடிக்கிறேன். சபரிமலைக்கு போவது போல சிலர் கூட்டணி சேர்ந்துள்ளனர்"  என்றார். 

 

kamal

 

சிறப்பு பேச்சாளர் ஸ்ரீபிரியா பேசும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகம் நடக்கிறது. அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. புதுச்சேரியில் பெண் ஆளுநர்தான் உள்ளார். ஆனால் அவர் முதல்வருடன் சண்டை போடுவதில் தான் மும்முரமாக உள்ளார். புதுச்சேரியில் இரண்டு சாமிகளும், தமிழகத்தில் ஒரு சாமியும் போலி சாமியார்கள். அவர்களை நம்பாதீர்கள். பெண்கள் முன்னேற்றம் அடைய மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்கு அளியுங்கள். பெண்களுக்கான தனி காவல்துறை, சொத்துரிமை, பெண்களுக்கு அனைத்திலும் சமபங்கு வழங்கப்படும். பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். 

அரசியலை யாரும் தவிர்க்காதீர்கள். நீங்கள் தவிர்த்தால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். பெண்கள் நினைத்தால் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரலாம். எனவே தைரியமாக குரல் கொடுங்கள்"  என்றார். 


வேட்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் பேசுகையில், "மத்திய அரசின் செல்ல பிள்ளையாக புதுச்சேரி  யூனியன் பிரதேசம் இருந்தது. ஆனால் 2007-க்கு பிறகு பொதுக்கணக்கில் இருந்த புதுச்சேரி மாநிலத்தை 2007 முதல் தனிக்கணக்கு ஆரம்பித்து புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது  நாராயணசாமியும், ரங்கசாமியும், வைத்திலிங்கமும்தான் காரணம்" என்றார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்