![cc](http://image.nakkheeran.in/cdn/farfuture/TtGxrVDx2Wd--WHhZR-8WCzhYmPSTV2Ksp9mWjNyLVY/1599479270/sites/default/files/inline-images/c21_4.jpg)
கரோனா நோயை ஒழிக்க ஒதுக்கப்பட்ட நிதி, தணிக்கைக்குழுக்கு செல்லவேண்டியதில்லை என்ற காரணத்தால் சென்னை மாநகராட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என சென்னை செங்கொடி சங்கத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.
அரசாணை எண் 62(2டி)-ன் படி (11.10.2017) குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ16.725 நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் திங்களன்று (செப்.7) ரிப்பன் மாளிகை அருகில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![ccc](http://image.nakkheeran.in/cdn/farfuture/zxoNoU39qTOf-wdkYDhH-HBgjYKnEmhGzfCDi7-OCSs/1599479283/sites/default/files/inline-images/c22_2.jpg)
போராட்டத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சங்கத் தலைவருமான எஸ்.கே.மகேந்திரன் பேசுகையில்,
துப்புரவு தொழிலாளர்களுக்கு தினந்தோறும் ரூ 624.50 வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த ஊதியம் வழங்கப்படவில்லை, கடந்த 10 ஆண்டுகளாக பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்தவர்களுக்கு 2020 ஜனவரி மாதகடைசியில் தான் ஒருபகுதி துப்புரவுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. தொழிலாளர்கள் பயன்படுத்தும் துடைப்பங்களைக்கூட தங்களது ஊதியதிலிருந்து வாங்க வேண்டிய அவலம் உள்ளது.
முன் களப்பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு அரசு அறிவித்த இரட்டிப்பு சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை ரூபாய் 2,500 இதுநாள் வரை வழங்கப்படவில்லை, முகக்கவசம் சில இடங்களில் மட்டுமே வழங்கப்பட்டடுள்ளது. அதுவும் சில மணிநேரங்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியவற்றை 15 நாட்கள் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது. பணியாளர் ஒருவருக்கு உணவுக்காக ரூ 100 ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கிக்கொள்வதாக கூறப்படுகிறது.
![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/hL9whL1q3iP1TaGT8StlF7odQuyI6XDZNQx1IYlaS8U/1599479304/sites/default/files/inline-images/c23.jpg)
கரோனாவை பயன்படுத்தி மாநகராட்சியில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஊழல் தலைவிரித்தாடும் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிய மகேந்திரன் இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் இல்லாத நிலை உள்ளது. தூய்மைப் பணியில் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் இருப்பதாலேயே அரசு அவர்களுக்கு பணப்பயன்களை வழங்காமல் இழுத்தடிக்கிறது என குற்றச்சாட்டை வைத்தார்.
![Ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/24IIj_WWURXA9FUDRz1Ui6oztOGg8IfO7fdyY44u2y8/1598702903/sites/default/files/inline-images/01_19.png)
செங்கொடி சங்கப்பொதுச்செயலாளர் சீனிவாசலு பேசுகையில், அரசும், மாநகராட்சி நிர்வாகமும் தூய்மைத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ரூ 2லட்சம் தொகையை வழங்கவேண்டும், கடந்த பல ஆண்டுகளாக பணிசெய்யும் என்.எம்.ஆர், என்.யூ.எல்.எம், சொர்ணஜெயந்தி, மலேரியா, அம்மாஉணவகம் உள்ளிட்ட அனைத்து துறை ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறிய அவர் நமது கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தினம்தோறும் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.