காங்கிரஸின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் இன்று (16.02.2021) தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். 2009-ல் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சிவகங்கையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டார் ப.சிதம்பரம். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ராஜ கண்ணப்பன் களமிறங்கினார். வாக்கு எண்ணிக்கையின்போதே பின் தங்கியிருந்தார் சிதம்பரம். ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிவிலும் இருவருக்கும் ஏற்ற இறக்கம் இருந்தது.
இறுதியில் 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வெற்றிபெற்றார். இந்த வெற்றியை எதிர்த்தும், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார் ராஜ கண்ணப்பன். சுமார் 10 ஆண்டுகளாக வழக்கின் விசாரணை நடந்து வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு கடந்த அக்டோபர் மாதம் (2020) தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.