- தெ.சு.கவுதமன்
பீகார் மாநிலத்தின் லாலு பிரசாத் யாதவின் புதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீஹார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் முழுவீச்சில் வளர்ந்து வரும் இளம் தலைவராக இருக்கிறார். இன்னும் ஓராண்டு காலத்தில் அங்கே பொதுத்தேர்தல் வரவுள்ள சூழலில், அடுத்த முதல்வராக அவர் வரக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவரை ஒழித்துக்கட்டுவதற்கான பல்வேறு முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்றதிலிருந்தே தொடர்ச்சியாக பரபரப்புச் செய்திகளில் பேசப்பட்டு வருகிறார். தமிழ்நாடு முதல்வரின் பிறந்த நாளில் கலந்துகொண்டபோது, "நமது நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெற்று வருகிறது. இதை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. வலுவான ஒரு மாற்றுச் சக்தியை உருவாக்க முதல்வர் ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சமூகநீதியைப் போதிக்கும் தமிழ்நாட்டை பார்த்து மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். சோசலிசம் மற்றும் சமூகநீதி கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் சந்திக்கும் தளமாகத் தமிழ்நாடு மாறியுள்ளது. இங்கு பின்பற்றப்படும் சமூகநீதி கொள்கைகளை வட இந்தியாவில் இருக்கும் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்." என்றெல்லாம் பேசியிருந்தது தேசிய அளவில் முக்கியத்துவத்தைப் பெற்றது.
இதையடுத்து, மு.க.ஸ்டாலினுக்கும், தேஜஸ்வி யாதவுக்குமான உறவை உடைப்பதற்கான வேலைகளில் ஒன்றிய அரசு மறைமுகமாக இறங்கியது. தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள், குறிப்பாக பீகாரைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டது. உத்தரபிரப் தேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த்குமார் உம்ராவ் என்பவர் பீகாரைச் சேர்ந்த 12 பேர் தமிழகத்தில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டார். இதையடுத்து பீகாருக்கும் தமிழ்நாட்டுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவியது. இதைச் சரிப்படுத்த தமிழ்நாடு காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கே நன்முறையில் பாதுகாப்புடன் இருப்பதாகவும் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரித்தது.
தமிழ்நாட்டுக்கு பீகார் மாநில உயர் அதிகாரிகள் குழு வந்து வட மாநிலத் தொழிலாளர்களைப் பார்வையிட்டுச் சென்றனர். தமிழக முதல்வரும் பீகார் முதல்வர், துணை முதல்வரோடு தொடர்புகொண்டு வதந்திகள் குறித்து விவரித்தார். இங்கு வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்போடு இருப்பதை எடுத்துரைத்தார். இதையடுத்து, பா.ஜ.க.வினர் வதந்தி பரப்புவதாகக் குற்றம் சாட்டிய தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு அரசு நன்முறையில் செயல்படுவதாகப் பாராட்டினார். இதில் மேலும் பா.ஜ.க. தலைமை கடுப்பானது. இந்நிலையில், 2004 - 2009 காலகட்டத்தில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, பீகார் முதல்வராக லாலுவின் மனைவி ராப்ரி தேவியின் ஆட்சியில் இவரது ஆட்சியின்போது இந்திய ரயில்வே துறையில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள், தேஜஸ்வி யாதவின் வீட்டிலும் அவரது சகோதரிகளின் வீட்டிலுமாக 24 இடங்களில் ரெய்டில் ஈடுபட்டனர். அவரது கர்ப்பவதியான மனைவி மிகவும் சிக்கலான சூழலில் இருப்பதையும் பொருட்படுத்தாமல் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த சோதனையில் ரூ.70 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்க கட்டிகள், 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 900 அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் கசியவிட்டது. ஆனால் இதெல்லாம் பொய்யான செய்திகள் என்றும் தங்களுக்கு எதிராகத் திட்டமிட்டு பொய்ச் செய்தியைப் பரப்புவதாகவும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த ரெய்டுக்குப் பின்னால் தேஜஸ்வி யாதவ் மீதான மக்கள் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது!