கரூர் மக்களவைத் தொகுதியில் நான்கு முறை எம்.பி.யாக இருந்தவர் அதிமுகவின் தம்பிதுரை. கடந்த முறை வெற்றி பெற்ற அவருக்கு நாடாளுமன்றத்தின் மக்களவை துணை சபாநாயகர் பதவியும் கிடைத்தது.
வையம்பட்டி ஒன்றியத்தில் உள்ள சின்னமனைப்பட்டி கிராமத்திற்குள் சென்றபோது, பொதுமக்கள் கூட்டத்தில் இருந்த பழனிச்சாமி என்பவர், ''நீங்க எதுக்குய்யா வர்றீங்க?. நாங்க எல்லாம் நொந்து போயிட்டோம். உங்களை கையெடுத்து கும்பிட்டு கேக்கிறேன். தயவு செய்து போயிடுங்க. இங்க நடக்க பாதைகூட கிடையாது'' என்றார். இதுதான் கரூரின் ஒட்டுமொத்த குரலாக தேர்தலுக்கு முன்பாகவே ஒலித்தது.
ஏமூர் புதூர் காலனியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, இதேபோன்று பொதுமக்கள் சிலர் குறுக்கிட, ஆவேசமடைந்த தம்பிதுரை, ''ஓட்டுக்கேட்பது எங்க கடமை. ஓட்டு போடுறதும், போடாததும் உங்கள் உரிமை. ஓட்டு போடுங்க. போடாட்டி போங்க. ஓட்டுக்காக கைல, காலுல விழமுடியாது'' எனப் பேசி அதிர்ச்சியடைய வைத்தார். அதுதான் 4,20,546 வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரை படுதோல்வி அடைய காரணமானது.