பாஜக ஆட்சியில் அமர்ந்து 9 ஆண்டுகள் ஆனதையொட்டி இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக அரசின் 9 ஆண்டுக் கால சாதனைகளை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்தியப் பிரேதச மாநிலம் கார்கோன் பகுதியில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பேசினார்.
அதில் அவர், “இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மிகவும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு பிரச்சனை வரும் முன்பே அவர்களுக்கு உதவிகளை பாஜக அரசு அளித்து வருகிறது. ஏழை மக்களுக்காக இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை அறிவித்து ஏழை மக்களை பாதுகாத்து வருகிறார் மோடி. இந்த 9 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை 22 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைந்துவிட்டது. அதில் மிகவும் மோசமான வறுமையில் இருப்போர் எண்ணிக்கை மட்டும் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளனர்.
இதன் மூலம் மக்கள் நலன் கருதி பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார் என்று தெரிகிறது. ஆனால், பிரதமர் மோடியை படிக்காதவர், தேநீர் விற்பவர் என்று மிகவும் தரம் தாழ்ந்து எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். மோடி அறிவித்த ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஜாதி, மத வேறுபாடு இன்றி நாட்டின் 40 சதவீதம் மக்கள் இந்த காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். உலகிலேயே மிகப் பெரிய இலவச மருத்துவக் காப்பிட்டுத் திட்டமாக ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் இருக்கிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லண்டனுக்குச் சென்று இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாக்கப்படவில்லை என்று பேசுகிறார். ஆனால், ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி ஆட்சியில் இருந்தபோது இந்தியாவில் அவசர நிலை சட்டத்தை அமல்படுத்தினார். அந்த சட்டத்தால் ஏராளமான மக்கள் சிறையில் துன்புறுத்தியபோது ராகுல் காந்தி கூறும் ஜனநாயகம் எங்கே போனது என்று தெரியவில்லை. அதைப் பற்றி அவர் பேசுவாரா? பிரதமர் மோடியை சர்வதேசத் தலைவர் என்று பல வெளிநாட்டுத் தலைவர்களும், சர்வதேச அமைப்பைச் சார்ந்தவர்களும் அவரைப் பாராட்டி புகழாரம் சூட்டி வருகின்றனர். மேலும், ‘நான் மோடியின் மிகப் பெரிய விசிறி’ என்று டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் கூறியிருக்கிறார். இப்படி உலகில் உள்ள அனைத்து தலைவர்களும் மோடியை பாராட்டி வருகின்றனர்.
இந்தியா பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி உலகில் 5வது மிகப் பெரிய நாடாகத் தன்னை முன்னிறுத்தியிருக்கிறது. இதுதான் பாஜகவின் தற்போதைய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. கடந்த கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்தியா மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். 2ஜி முறைகேடு, நிலக்கரி சுரங்க முறைகேடு, ஹெலிகாப்டர் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடந்த முறைகேடு என இந்தியா முழுதும் ஊழல் மயமாக இருந்தது. காங்கிரஸ் எவ்வளவு தான் பாஜகவுக்கும் மோடிக்கும் எதிராக அவதூறுகளைப் பரப்பினாலும் நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் மோடியின் பக்கம் நிற்கிறார்கள். அதனால், மீண்டும் மோடி தான் இந்தியாவின் பிரதமர் ஆவார்” என்று கூறினார்.