![“This is what happened during the EPS regime” - RB Udayakumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/AdN7FN8H0IcF82VTowhrDW8qtN3-ejrHe_zATn9znNc/1671359868/sites/default/files/inline-images/211_11.jpg)
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் தமிழகம் முதலிடத்தில் இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
விருதுநகர் ராஜபாளையத்தின் அருகே உள்ள சாஸ்தா கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது குடும்பத்துடன் வழிபாடு நடத்தினார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பால்விலை உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவற்றிற்கு எதிராக அதிமுக சார்பில் மாநகராட்சி, பேரூராட்சி வாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஆங்கில நாளிதழில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகச் செய்தி வந்தது. ஆனால், உண்மை என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முதலிடத்தில் தான் இருந்தது. இதை அந்த ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
சாமானிய மக்களுக்கு ஆதாரமாக இருப்பதே பால்தான். அதன் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிவிப்பாகவே இருக்கிறதே தவிர அதற்கான அரசாணையோ திட்டங்களின் செயல்பாடுகளோ மக்களுக்குப் போய்ச் சேர்ந்ததாகத் தெரியவில்லை” எனக் கூறினார்.