மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வாரி வாரி வழங்கிய ஆட்சி அதிமுக. திமுக மீனவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை காசிமேடு துறைமுகத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அதன் பின் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிந்து அதற்கான நிவாரணங்களை வாரி வாரி வழங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.
அதேபோல் கஜா புயல், ஓகி புயல் மற்றும் வர்தா புயல் ஏற்பட்ட சமயத்திலும் மீனவ மக்களும் விவசாயிகளும் எவ்விதத்திலும் பாதிக்கப்படாதவாறு பொருளாதார ரீதியாக அவர்களை ஏற்றம் பெற வைக்க நிவாரணம் வழங்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகிறது. விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். குறிப்பாக மீனவ சமுதாயம் முழுக்க முழுக்க வஞ்சிக்கப்படுகிறது. தேர்தல் காலத்தில் மீனவர்களுக்குச் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. டீசல் விலை ஏறிக்கொண்டே உள்ளது.
குறிப்பாக அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு 1500 லிட்டர் டீசல் கொடுப்போம். அனைத்து வகையான படகுகளுக்கும் மானியம் கொடுத்தோம். ஆனால் டீசல் மானியத்தை 2500 லிட்டராக உயர்த்த வேண்டும் எனக் கூக்குரல் கொடுக்கிறார்கள். திமுக அரசு அதை நிறைவேற்றவில்லை. மீனவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். ஒரு பக்கம் கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.