ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலைகளை தனது தொகுதியில் அமைப்பதாக தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம், ஜம்தாரா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இர்பான் அன்சாரி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “உலகத் தரம் வாய்ந்த 14 சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இச்சாலைகள் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட மென்மையாக இருக்கும்” என உள்ளது. இது தற்போது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவரான காங்கிரஸ் எம்.எல்.ஏ. இர்பான் அன்சாரி இதற்குமுன்பும் சில சர்ச்சைக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் முகக்கவசம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் நிகழ்ச்சிகளில் முகக்கவசம் இன்றி அவர் பங்கேற்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “முகக் கவசங்களை நீண்ட நேரம் அணியக் கூடாது. ஒரு MBBS மருத்துவராக நான் நீண்ட நேரம் முகக் கவசத்தை பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறேன். ஒருவர் கூட்டத்தில் இருக்கும்போது முகக் கவசம் அணிய வேண்டும். இந்த மூன்றாவது கோவிட்-19 அலையின் போது பீதி அடையத் தேவையில்லை. ஐந்து அல்லது ஆறு நாட்களில் இதன் அறிகுறிகள் குணமாகிவிடும்" என்று தெரிவித்திருந்தார். இது சர்ச்சையானது. அதற்குள்ளாக சாலைகள் கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட மென்மையாக இருக்கும் என அவர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
முன்னதாக, மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனா தலைவருமான குலாப்ராவ் பாட்டீல் சமீபத்தில் தனது சட்டமன்றத் தொகுதியான ஜல்கான் மாவட்டத்தில் உள்ள சாலைகளின் சீரான தன்மையை நடிகரும், அரசியல்வாதியுமான ஹேமமாலினியின் கன்னங்களுடன் ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். இந்த கருத்துக்கு அமைச்சர் பின்னர் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.