திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ளோம் எனவும், 2026 ஆம் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தான் விசிக இருக்கும் எனவும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இதனை விளக்கும் வகையில் அறிக்கை ஒன்றை திருமாவளவன் வெளியிட்டுள்ளார். அதில், 'திமுகவுடன் கூட்டணி குறித்து சந்தேகம் கிளப்பும் சதி அறிவோம். விஜய் கட்சியுடன் விசிக கூட்டணி அமைப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். திமுக கூட்டணியின் தொடர் வெற்றிகளை சிலரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. தோழமைக் கட்சிகளோடு நாம் உருவாக்கிய கூட்டணியில் தான் தொடர்கிறோம். உறுதியாகத் தொடர்வோம். உணர்ச்சிகளை தூண்டி நம்மை நிலைகுலைய வைக்கும் சதி நிறைந்த முயற்சி இது.
நூல் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து நம்பகத்தன்மையை நொறுக்க முயற்சிக்கின்றனர் சிலர். ஆதாயம் கருதி அங்குமிங்கும் அல்லாடும் அற்ப அரசியல் செய்யும் சராசரி பேர்வழி எனக் கருதுகின்றனர். ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகளுடன் சின்னஞ்சிறு முரண்களை கூர்த்திட்ட முயல்கின்றனர். குழப்பம் தேவையில்லை நமது இலக்கில் நாம் குறியாக இருப்போம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அரசியல் நிலைப்பாட்டை வென்றெடுக்க கவனம் குவிப்போம்.
கூட்டணி குறித்து திட்டமிட்டு ஐயம் எழுப்புவோர் திமுகவுக்கு மட்டுமல்ல விசிகவிற்கும் பகையானவர்களே. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சிதறடிக்கும் நோக்கத்தில் சிலர் செயல்படுகின்றனர். அரசியல் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கப்பட்டு இருக்கிறோம். சிலரின் தூண்டுதல்களுக்கு பலியாகாமல் நாம் எச்சரிக்கையோடு இயங்க வேண்டும். திமுக கூட்டணிக் கட்சிகள் இடையே கொம்புசீவும் சிலர் முயற்சியில் ஈடுபடுகின்றனர். திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பை கண்டு சிலர் எரிச்சல் அடைகின்றனர். திமுக-விசிக இடையே உரசலை உருவாக்குவதில் தீவிரம் காட்டுகின்றனர். விஜய்யின் உரையை நாம் கண்டும் காணாமல் கடந்து போய் இருக்கலாம். ஆனால் வழியில் காலை நீட்டி வம்புக்கு இழுப்பவர்களை நாம் எப்படி கடந்து போவது?' என தெரிவித்துள்ளார்.