நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அண்மையில் ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ளதை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது, ''நீட் எதிர்ப்பில் திமுக உறுதியாக இருக்கும். நீட் தேர்வை மேலோட்டமாக பார்க்கக்கூடாது. முகமூடியைக் கழற்றி பார்க்கவேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும் முழுமையாக வெற்றி பெற்றால் தான் மக்களிடம் திட்டங்களைக் கொண்டு போய் சேர்க்க முடியும். ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் முடியும் முன்பே 75% மேல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்'' என்றார்.