Skip to main content

“முதன்மைக் கட்சியாகும் பயணத்தைத் துரிதப்படுத்தியுள்ளோம்” - பாஜக பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

"What people have benefited from Prime Minister's schemes, plans have been made to feed the people" Pon. Radhakrishnan

 

பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கிளை அளவில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

 

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக தயாராகி விட்டது. தேர்தலுக்குக் கட்சியை வலுப்படுத்தும் நோக்கை இலக்காகக் கொண்டு பணிகள் பகிரப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் பிரதமரின் திட்டங்களைக் கொண்டு சேர்த்து தமிழக மக்கள் எந்த அளவிற்குப் பயன்பெற்றுள்ளார்கள் என்பதைத் தமிழக மக்களுக்கு உணர்த்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாது அதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கும் அடித்தளம் அமைக்கும் வகையில் பாஜகவின் பார்வை ஆழமாகச் சென்றுள்ளது. 

 

அதிமுக உடனான கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. மாநிலத் தலைவரின் கருத்துகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அப்படியேதான் தொடர்கிறது. அனைத்துக் கட்சிகளின் நோக்கமும் முதன்மைக் கட்சிகளாக வரவேண்டும் என்பதுதான். பாஜகவின் நோக்கமும் அதுதான். அதை நோக்கிய பயணத்தைத்தான் துரிதப்படுத்தியுள்ளோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்