Skip to main content

''பெயர் வேண்டுமானால் க்யூட் ஆக இருக்கலாம் ஆனால்...''-சட்டப்பேரவையில் வேல்முருகன் பேச்சு!

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

velmurugan

 

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்ற முன்மொழிந்துள்ளார்.

 

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என வலியுறுத்தி ஏற்கனவே கடந்த 6 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று கேள்வி நேரத்தின் மீதான விவாதத்தின் பொழுது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். பிளஸ் டூ மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்வது ஏற்புடையதல்ல. மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' என வலியுறுத்தி இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.

 

இந்த தீர்மானத்தின் முன்மொழிவை தமிழக வாழ்வுரிமை கட்சி,  கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலுமுருகன் பேசுகையில், ''ஒன்றிய அரசு தொடர்ந்து மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களையும் பறித்துக்கொள்ள நினைக்கிறது. அந்த வகையில் உயர்கல்வியிலும் ஒன்றிய அரசு உரிமைகளை பறிக்க நினைக்கிறது. சட்ட, கால்நடை, விவசாய பல்கலைக்கழகம் என எந்த பல்கலைக்கழகங்களிலும் இனி இந்த மண்ணில் வாழுகின்ற ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மாணவ செல்வங்கள் கல்வி பயில வேண்டும் என்று சொன்னால் 12 ஆண்டுகள் தமிழக அரசின் கல்வி முறையில் பயின்ற படிப்புக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லாமல் மத்திய அரசு கொண்டுவரும் இதுபோன்ற நுழைவுத்தேர்வுகளை மட்டுமே வைத்து, அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் உயர்கல்வி பெற முடியும் என்ற சூழலை உருவாக்கித் தந்திருக்கிறது. இது கல்வி உரிமையை பறிக்கின்ற ஒரு பாதக செயல். தேர்வின் பெயர் வேண்டுமானால் க்யூட் ஆக (CUET )இருக்கலாம். ஆனால் இது கியூட் ஆக இல்லை'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்