தமிழகச் சட்டமன்றத் தேர்தல் மே மாதம் துவக்கத்திலோ அல்லது ஏப்ரல் இறுதியிலோ நடைபெறுமென அரசியல் கட்சியினரும் மக்களும் கணக்கிட்டுக்கொண்டிருந்த நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதுவரை சற்று நிதானமாகவே சென்றுகொண்டிருந்த அரசியல் செயல்பாடுகள் சட்டென்று வேகமெடுக்க ஆரம்பித்தது. அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகக் கட்சிகள் தங்களது கட்சித் தொண்டர்களிடத்தில் விருப்ப மனுவை வாங்கத் துவங்கியது. அது ஒருபுறம் வேகமெடுக்க மறுபுறம் கூட்டணி குறித்த பேச்சுகள் வேகமெடுத்தது.
பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை அனைத்தும் தங்கள் கூட்டணி குறித்துப் பேச குழு ஒன்றை நியமித்து, அதன் மூலம் அக்கட்சிகளின் தலைமை அலுவலகத்திலோ அல்லது நட்சத்திர ஹோட்டல்கள் போன்ற பொது இடத்திலோ கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்தும். அதன்படி, அதிமுகவுடன் பாமகவின் குழு பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்து, 23 இடங்களைப் பெற்றுள்ளது. அதிமுகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான பாஜகவும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. திமுகவும் அதுபோலவே கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்புவிடுத்து அக்கட்சிகளின் கூட்டணிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
ஆனால், அதிமுக, தேமுதிக கூட்டணி மட்டும் பல கட்டப் பேச்சு வார்த்தைகளாகவும் பல நபர்கள் பேச்சுவார்த்தையாகவும் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க. அமைச்சர்கள், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்திருந்த நிலையில், மீண்டும் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகளான அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் கூட்டணி குறித்த பேச்சு இறுதியாகவில்லை.
கடந்த சில மாதங்களாகவே தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க., கூட்டணிக்கு அழைக்காவிடில், தனியாகத் தேர்தலைச் சந்திக்கும் பலமும், போட்டியிடுவதற்கான வேட்பாளர்களும் தே.மு.தி.க.வில் உள்ளனர் எனச் செய்தியாளர் சந்திப்புகளில் தெரிவித்திருந்தார். சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா விரைவில் அரசியலில் ஈடுபட வேண்டும் என அவர் கூறியதும் அரசியலில் பெரும் விவாதத்தையும், அதிமுக இல்லை என்றால் வேறு கூட்டணிக்குக் கணக்குப் போடுகிறாரா பிரேமலதா எனப் பேச்சுகள் எழுந்தது. பிரேமலதா, சசிகலாவை சந்திக்கத் திட்டமிட்டு வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தே.மு.தி.க. தலைவரை வீட்டிலேயே சந்தித்துப் பேசிய அமைச்சர்கள், அமைச்சர் வீட்டில் தே.மு.தி.க. நிர்வாகிகள் நடத்திய பேச்சுகள் எனப் பரபரப்பாய் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்க, தேமுதிகவின் துணைச் செயலாளர் சுதீஷ், ஓ.பி.எஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்டிருப்பது அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த அமமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன், தமிழகத்தில் அமமுகவின் தலைமையில் வலுவான கூட்டணி ஒன்று அமையும் அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தார். பிரேமலதாவின் பேச்சும், சுதீஷ் தற்போது நேரம் கேட்டிருப்பதும், தினகரனின் பொதுக்குழு பேச்சும் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.