இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் பணப்பட்டுவாடா செய்யும் என்று கிண்டல் செய்வார்கள். ஆனால் இங்கு எதிர்க்கட்சிகள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று சொல்லுகிறார்கள் என திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது பெரும் விவாதத்தையே எழுப்பியது.
இதுகுறித்து விசாரித்தபோது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் ஏராளமான புகார் கிளம்பியது. ஆனால் நான்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா பற்றிய புகார் எதுவும் பெரியதாக கிளம்பவில்லை.
அந்த நான்கு தொகுதியிலும் களத்தில் இருக்கும் திமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று கட்சிகளும் தங்களுக்குள், யார் வேண்டுமானாலும் பணப்பட்டுவாடா பண்ணிக்கலாம். யாரும், யாரையும் தடுக்கவோ, போட்டுக்கொடுக்கவோ கூடாது. பணத்தை வாங்குபவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் அவங்க விருப்பப்படி வாக்களிக்கட்டும் என எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுக்கிட்டார்களாம். அதனால் புகார்கள் பெரியதாக தேர்தல் ஆணையத்திற்கு போகலையாம்.
நான்கு தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுப்பதில் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துவிட்டதா?. ஆளும் கட்சித்தான் பணப்பட்டுவாடா செய்யும் என அமைச்சர் வெளிப்படையாக பேசுவதன் பின்னணி என்ன?. அனைவரையும் பணவிநியோகம் செய்ய அனுமதித்ததாலேயே அதிக புகார்களை பிரதான கட்சிகள் எழுப்பவில்லையா?. பண விநியோகம் மட்டுமே நான்கு தொகுதியில் வெற்றி தோல்வியை தீர்மானித்துவிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.