நக்கீரன் மார்ச் 25 இதழில், ‘சட்டமன்றத் தேர்தல் 2021 – 234 தொகுதிகளில் யார் முன்னிலை? பண விநியோகத்துக்கு முன் கள நிலவரம்!’ என்னும் தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டு, நக்கீரன் டீம் எடுத்த சர்வே விபரங்களை வெளியிட்டுள்ளோம்.
திருச்சுழி தொகுதி வேட்பாளர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தி, நக்கீரன் இதழில் ‘கள நிலவரம்’ வெளிவந்திருக்கும் நிலையில், நக்கீரன் இணையதள வாசகர்களுக்காக திருச்சுழி தொகுதி குறித்த விரிவான கட்டுரை இதோ:
தங்கம் தென்னரசு (திமுக) – ராஜசேகர் (மூ.மு.க.)
‘இனி திருச்சுழி தொகுதி அதிமுகவுக்கு இல்லை என்று போர்டு மாட்டாத குறைதான். கட்சியின் தலைமையே இப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டது’ என்று பேசிக்கொள்கிறார்கள் இத்தொகுதியின் ஆளும்கட்சியினர். காரணம், இங்கே அதிமுக தேறாது என்று, கூட்டணிக் கட்சியான மூவேந்தர் முன்னணி கழகத்துக்கு இரண்டாவது தடவையாக இத்தொகுதியைத் தள்ளிவிட்டதுதான்.
திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசுவும், அதிமுக கூட்டணி - மூ.மு.க. வேட்பாளராக ராஜசேகரும், அமமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. சிவசாமியும் களமிறங்கியிருக்கின்றனர்.
தந்தை தங்கப்பாண்டியன் காலத்திலிருந்தே, இத்தொகுதி மக்களுடன் இணக்கமாக இருந்துவரும் திமுக, மகன் தங்கம் தென்னரசு காலத்திலும் அந்தப் பந்தத்தை தொடர்வதும், தக்கவைத்துக்கொள்வதுமாக இருக்கிறது. மாற்றுக் கட்சியினரையும் அரவணைத்துச் செல்பவராக தங்கம் தென்னரசு இருப்பதால், ‘அடுத்து திமுக ஆட்சிதான்’ என்ற நம்பிக்கையோடு அதிமுகவிலிருந்து பஞ்சாயத்து தலைவர்களும், ஒன்றியக் கவுன்சிலர்களும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை தொகுதியாக இருந்தபோதும், மறு சீரமைப்புக்குப் பின் திருச்சுழி தொகுதியாக மாறிய பிறகும், தொடர்ந்து மூன்று தடவை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் தங்கம் தென்னரசு. தொகுதியின் நல்லது, கெட்டதுகளில் தவறாமல் கலந்துகொள்ளும் இவர், விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக, தன்னை நிலைநிறுத்தி வருகிறார். தொடர்ந்து அதிமுக ஆதரவில் உறுதியாக இருந்த முத்தரையர் வாக்குகளையும்கூட, சாதுர்யமாக திமுக பக்கம் திருப்பியிருக்கிறார்.
மூமுக வேட்பாளர் ராஜசேகரைப் பொறுத்தமட்டிலும், இரட்டை இலை சின்னம்தான் ப்ளஸ் பாயிண்ட். தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்படாத வருத்தத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடம், ‘வேணும்னா என் நெஞ்சுல குத்துங்க. கூடவே இருந்து முதுகுல குத்திடாதீங்க..’ என்று வேட்பாளரே பேசிவரும் நிலையில்தான் இருக்கிறது ஆளும்கட்சியினரின் ஒத்துழைப்பு. கரன்ஸியில் குளிப்பதில் ஈடுபாடுள்ள அதிமுகவினர், இத்தொகுதியை அம்போவென விட்டுவிட்டு, ராஜேந்திரபாலாஜி போட்டியிடும் ராஜபாளையத்துக்குச் சென்றுவிட்டனர்.
கணிசமாக உள்ள அகமுடையார் வாக்குகளை அறுவடை செய்பவராக இருக்கிறார் அமமுக வேட்பாளர் சிவசாமி. நாம் தமிழர் கட்சி – ஆனந்தஜோதி, மக்கள் நீதி மய்யம் - முருகன், புதிய தமிழகம் – திருமுருகன் ஆகியோரும் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.