ஐஐடி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15ம் தேதி அன்று திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கன்னியாகுமரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எந்த இடத்திலும் மாநில மொழியை குறைத்து மதிப்பிட வேண்டும் என்றோ மாநில மொழியை மீறி இந்தியைக் கொண்டு வர வேண்டும் என்றோ எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் என்பதற்காக இதை மறுபடியும் கையில் எடுக்கிறார்கள். உடலையும் உயிரையும் போல் தமிழகத்தையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.