தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 156 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 77 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிமுகத்தில் உள்ள நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,''தமிழ்மொழிக்கும் - இனத்துக்கும் - நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எத்தனை சோதனைகள் - எத்தனை வேதனைகள் - எத்தனை பழிச்சொற்கள் - எத்தனை அவதூறுகள் - என திமுக மீது வீசப்பட்ட அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி! உங்களுக்கு உண்மையாக இருப்பேன்! உங்களுக்காக உழைப்பேன்! என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்!
ஜனநாயகப் போர்க்களத்தில் தி.மு.க. கூட்டணி அடைந்த வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல மதித்தும் நினைத்தும் காலையில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமயச் சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி'' எனக்கூறியுள்ளார்.