2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, அதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டநிலையில், நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதம் மற்றும் கேள்வி நேரம் தற்போது நடைபெற்றுவருகிறது.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய செல்லூர்ராஜூ, ''கோடான கோடி நன்றி தலைவரே... இத்தனை நாட்கள் பேச வாய்ப்புக்கேட்டும் இன்னைக்குத்தான் கொடுத்திருக்கிறீர்கள். ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி... மதுரையில் இயங்கும் மாநகர பேருந்துகளில் எல்லா பேருந்துகளிலும் இலவசமாக இருந்தால் பரவாயில்லை. குறிப்பிட்ட பேருந்துகளில்தான் ஏறமுடியும் என்று சொல்கிறார்கள். இதனால் பெண்கள் சரியான நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு போக முடியாமல் சிரமப்படுகிறார்கள்' 'என்றார். இதனைக் கேட்டு அவையிலிருந்த அனைவரும் சிரித்தனர்.
அப்பொழுது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ''அனைத்து நகர பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என்பதுதான் திட்டம். நீங்கள் அதில் ஏதாவது குறிப்பிட்டு சொன்னால் அமைச்சரிடம் கேட்கலாம்...'' என்றார்.
மீண்டும் பேசிய செல்லூர்ராஜூ, ''மதுரை மாநகரில் குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டுமே மகளிருக்கு இலவசம் என அனுமதிக்கப்படுகிறார்கள். இதே மற்ற பேருந்துகளில் ஏற்றுவது கிடையாது. சபாநாயகர் சொல்வதைப்போன்றும், அமைச்சர் சொல்வதைப்போன்றும் எல்லா பேருந்துகளிலும் ஏற்றுகிறார்களா என பேரவை தலைவர் வாயிலாக அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ''சபாநாயகர் அவர்களே.. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு 40 சதவிகிதம் என்று வைத்தார்கள். ஆனால் இப்பொழுது 61.82 சதவிகிதம் என கூடிவிட்டது. இந்த உள்ளாட்சி தேர்தலில் கூட 100 ல் 48 சதவிகிதத்தினர் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் 90 சதவிகிதம் பேர் வாக்களித்தார்கள். எனவே மகளிர் பேருந்து என்பது முதல்வரின் கனவுத்திட்டம். முதலில் 1,309 கோடி ரூபாய் ஒதுக்கிய அரசு இந்தமுறை 1,510 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மிக திருப்தியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அப்படி ஏதாவது குற்றச்சாட்டு வந்தால் எல்லா பேருந்திலும் ஃபிரீ ஆக விட்டால் எப்படி பஸ் கம்பெனியை நடத்துவது. ஏற்கனவே 48 ஆயிரம் கோடி லாசில் போய்க்கொண்டிருக்கிறது'' என்றார்.