“ஊழலை பற்றி பேச பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக என 4 கட்சிகளுக்கும் என்ன தகுதி இருக்கிறது?” என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக வழக்கு போடும் போது அதில் ஜனநாயகம் இருக்கும். திமுக பாதிக்கப்படும் போது இது ஜனநாயகமா, இது அத்துமீறல், பழிவாங்கும் நடவடிக்கை என்பார்கள். ட்விட்டரில் செய்தி போட்டால் உங்களை தூக்கி குண்டாஸில் போடுகிறார்கள். அரசுக்கெதிராக கருத்து சொன்னாலே குண்டாஸ் போடுகிறார்கள். அப்போதெல்லாம் இல்லாத கருத்து சுதந்திரம் இப்போது வருகிறது.
செந்தில் பலாஜியை கைது செய்த போது அத்தனை அமைச்சர்களும் சென்று பார்க்கிறார்கள். இதுவே கனிமொழியை கைது செய்தபோது கூட சென்று பார்க்கவில்லை. அடுத்து ஒரு வேளை நம் வீட்டிற்கு வந்துவிடுவார்களோ என்ற பயம் தான். அதுதான் காரணம். வருவாய் குவிக்கிற இரு இலாகாக்கள் கனிமொழியிடம் இல்லை. இவரிடம் உள்ளது. அதனால் அவரை பார்க்க வேண்டியுள்ளது.
ஊழலை பற்றி பேச பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக என 4 கட்சிகளுக்கும் என்ன தகுதி இருக்கிறது? எனக்கு இருக்கிறது, நான் பேசலாம். பாஜக கர்நாடகத்தில் தோற்றதே 40% ஊழல் குற்றச்சாட்டு என்கிறார்கள். எடியூரப்பாவை முதல்வராக இருக்கும் போது எதற்கு இடைநீக்கம் செய்தார்கள். அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தான். மகாராஷ்டிராவில் 40 சட்டமன்ற உறுப்பினர்களை வாங்கினீர்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு 130 கோடி பணம் கொடுத்தீர்கள். இப்படி பணம் கொடுப்பது லஞ்சமா, இல்லையா? ஃபிரான்ஸ் போர் விமானம் விவகாரத்தில் உங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன? ஜெயலலிதா ஆட்சியில் நடந்த இந்த ஊழலை இவ்வளவு காலம் விட்டு இப்போது நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?” எனக் கூறினார்.