தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் 14-ந் தேதி கூடுகிறது. பட்ஜெட் மீதான விவாதம் 17-ந் தேதி துவங்கி அதிகப்பட்சம் 5 நாட்கள் நடக்கும் என திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த கூட்டத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப முடிவு செய்திருக்கிறது திமுக! இந்த நிலையில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பேரவைச் செயலகத்தில் திமுக கடிதம் தந்துள்ளது.
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்த சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு மாறானது. அதனால், வரும் 14-ஆம் தேதி துவங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பேரவையின் பிரதான எதிர்கட்சியான திமுக சார்பில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மா. சுப்ரமணியன், சேகர்பாபு ஆகியோர் அந்தக் கடிதத்தை கொடுத்துள்ளனார்.
சமீபத்தில், கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த ஜனவரி 3-ஆம் தேதி திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.